முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளின் ஹபாயாக்களை பொசுக்கும் இனத்துவேச தீயும் அதற்கான சட்ட ரீதியான பதிலடியும்.

0
98

இலங்கையில் அண்மைய காலங்களாக எமது பெண்மணிகள் அடுப்பங்கறை கலாசாரத்திலிருந்து மீண்டு தாங்களாகவே படித்து ஒவ்வொரு துறைகளிலும் மிளிர்ந்து கொண்டிருப்பதனூடாக தாங்களும் சாதிக்கப்பிறந்தவர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டிருப்பதையும் நாம் காண்கின்றோம்.

15,000க்கு மேற்பட்டவர்கள் போட்டிப்பரிட்சை எழுதி அதில் 250 மாணவர்களை மாத்திரமே உள்வாங்கப்படும் இலங்கை சட்டக்கல்லூரியில் 3 வருடங்கள் முழுமையாக படித்து,அதன் பின் போட்டி நிறைந்த சட்டத்தரணி தொழிலை செய்கின்ற எமது பெண்மணிகள் பல இடைஞ்சலுக்கு ஆளாகின்றார்கள் என்பதை நான் நேரடியாக அவதானித்து வருகிறோம்.

குறிப்பாக முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள். தமது ஹபாயா உடையை நீதிமன்றில் அணிந்து வருகின்ற போது அதற்கு எதிராக பனிப்போரை சில மாற்று இன பெண் சட்டத்தரணிகள் ஆண் சட்டத்தரணிகளை தூண்டிவிடுவதினூடாக தொடுத்துக்கொண்டேயிருக்கிறாரகள் .சில நீதிமன்றங்களில் நீதிபதிகளும் இந்த ஹபாயா ஆடைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்ததை அறிந்து அவரகளின் அறியாமையைக்கண்டு ஆச்சரியப்படுகிறேன்.

ஹபாயாவுக்கு எதிரானவர்களின் வாதம் என்னவெனில் (saree)சாரிதான் பெண் சட்டத்தரணிகளின் ஆடையென உயர் நீதிமன்ற சட்டத்தரணிகளுக்கான ஒழுக்க க் கோவையில் கூறப்பட்டுள்ளது என்பதாகும்.இதை ஆதரிக்கும் சில முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் வாய் பேசா மடந்தையாக “கூட்டத்தோடு கோவிந்தா” என்பது போன்று சாரி அணிந்து நீதிமன்றம் வருகின்றார்கள்.

உண்மையில் உயர்நீதிமன்ற சட்டத்தரணிகளுக்கான ஒழுக்க விதியில் saree சாரிமாத்திரமா பெண்சட்டத்தரணிகளின் ஆடை என்பதைப்பார்ப்போமானால் நிச்சயமாக சாரி மாத்திரம் நீதிமன்ற ஆடையல்ல என்பது தெட்டத்தெளிவாகும்.

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் ஆடை சம்பந்தமான 1978ம் ஆண்டின் 1/7 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் பெண் சட்டத்தரணிகளுக்கான உடை எவ்வாறு இருக்க வேண்டும் பிரிவு 7 கூறுகிறது.

Sec 7. The attire of women Attorneys -at-law shall be as follows:-

White,black,grey or mauve saree and jacket,

or white ,black,grey or mauve frock.

பிரிவு 7 .பெண் சட்டத்தரணிகளின் ஆடை பின்வருமாறு அமைதல் வேண்டும்.

வெள்ளை,கறுப்பு,சாம்பல் அல்லது ஊதா நிற சாரியும் சட்டையும் அல்லது

வெள்ளை,கறுப்பு,சாம்பல் அல்லது ஊதா நிற முழு நீளச்சட்டை (frock).

என ஒழுக்க விதி கூறுகின்றது. frock என்பது நாகரிகம் என்ற பெயரில் தொடைக்கு மேல் உடுத்தும் சட்டை எனக்கருதக்கூடாது. பிரித்தானிய நடபடிமுறையைப் பின்பற்றி எமது நீதித்துறையானது கிரிஸ்தவ கன்னியாஷ்திரிகள் உடுத்தும் முழு நீளச்சட்டையையே கருத்தில் கொண்டு அவ்வாடையையே ஒழுக்கவிதியில் உள்வாக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் Defrock என்றால் ஒரு தவறு செய்யும் ஒரு கன்னியாஷ்திரியின் பதவியை இல்லாமாக்கப்படுவற்கு கூறப்படும் சொல்லாகும்.எனவே சட்டத்தரணி தொழிலானது கண்ணியமான தொழில் என்பதால் கன்னியாஷ்திரிகள் அணியும் சட்டையை கருத்தில் கொண்டுதான் frock என ஒழுக்கக் கோவையில் சேர்த்துள்ளார்கள்.

அன்னை தெரேசா எவ்வாறான ஆடையை அணிந்தாரோ அதே வகையான ஆடையைத்தான் எமது முஸ்லீம் பெண் சட்டத்தரணிகளும் அணிகிறார்கள்.ஹபாயா என்பது சட்டத்தரணிகளின் ஒழுக்கக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள frockக்கு எந்த வகையிலும் குறைந்தது அன்று.

கொழும்பில் எனது மனைவியும் ஒரு சட்டத்தரணியாக இந்தச்சவாலை அன்றாடம் சந்திக்கிறார்.இதற்கான வாதப்பிரதிவாதங்களின் போது எனது உதவியுடன் இனத்துவேச வாதங்களை முறையடித்துவருகின்றார்.அல்ஹம்துலில்லாஹ்.

வட கிழக்கைப்பொறுத்தவரையில் சில சட்டத்தரணிகள் சமூக ஊடகங்களில் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளின் கண்ணியமான ஹபாயா ஆடையை நீதிமன்றங்களில் அணிய முடியாது என வாதிட்டு உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை முற்போடுகிறார்கள்.

இதற்கு பதிலளிப்பதற்கு போதுமான ஆதரங்களை முன்வைத்து என் மீது சுமத்தப
பட்ட இறைவனின் பொறுப்பினை (அமானித த்தை ) நிறைவேற்றியவனாக ,

அன்பான தமிழ்பேசும் நீதிபதிகளே!சட்டத்தரணிகளே ! நீதிமன்ற உத்தியோகத்தர்களே! இனதுவேசத்தை பெண் ஆடைகளில் காட்டாமல் இனிமேலும் எமது முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளின் ஹபாயா உடைக்கான சட்டத்தினால் வழங்கப்பட்ட கண்ணியத்தை வழங்குவதில் கவனம் செழுத்துவோம்.சட்ட நுணுக்கங்களை படித்த பின் கருத்துக்களை வெளியடுவோம்.இல்லாவிட்டால் frock கின் விளக்கத்தினை ஒழுக்கக்கோவையை உருவாக்கிய உயர் நீதிமன்றத்திடமே கேட்பதட்கு எமது இரும்பு முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் தயாராக இருக்கிறார்கள்.

சட்டத்தரணி சறூக் -கொழும்பு


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here