முஸ்லிம் தனித்துவ அரசியலின் சதுரங்க விளையாட்டு

0
49

மனித நாகரீக வளர்ச்சியில் இனக்குழுக்களாக அலைந்து திரிந்த மக்கள் தமக்கான நிரந்தர வதிவிடங்களை வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்ட இடங்களில் அமைத்துக் கொண்டனர். இவ்வாறு அமைந்த தமது நிரந்தர வதிவிடம் அம்மக்கள் குழுக்களின் பாரம்பரிய வாழ்விடமாக அமைந்தது. அத்துடன் அவர்களின் மொழி, கலாசாரம், பொருளாதாரம் என்பன அம்மக்களுக்கான பொதுத் தன்மையினை பெறுகின்றது. தற்கால மானுட கற்கையில் இந்நான்கு அம்சங்களே ஒரு இனக்குழுவை தேசியமாக அங்கீகரிக்கும் வரையறைகள். இதில் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரம் மிகப்பிரதானமாகும். சாம்ராஜ்யங்கள் உருவாக்கத்துக்கும் வீழ்ச்சிக்கும் அப்பிரதேச மக்கள் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தினை எவ்வாறு பாவித்தனர் என்பதிலேயே தங்கியிருந்தது. பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில் மேலாதிக்க சக்தியாக ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்க முற்படும் போது அரசியல்ரீதியான பாதுகாப்பை ஒடுக்கப்படும் சமூகம் தேடுகின்றது.

இலங்கையின் வரலாற்றில் நிலத் தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்துவத்தில் சிறுபான்மை மக்கள் சுதேசிகளிடமும் விதேசிகளிடமும் காட்டிய ஈடுபாட்டினை பண்டைய வரலாறு முதல் தற்கால வரலாற்று ஆசிரியர்களின் ஆக்கங்களின் மூலம் அறியமுடிகிறது. இலங்கையின் பாராளுமன்ற ஆட்சி முறையின் வளர்ச்சியின் மைல்கல்லான 1833 ஆம் ஆண்டய கோல்புறூக் கமரன் சீர்திருத்தத்தில் இருந்து எமது பார்வையினை தொடங்குவது தற்காலத்துக்கு பொருத்தம். கோல்புறூக் கமரன் சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது சட்டசபைக்கு ஆறுமுகம் பிள்ளை குமாரசுவாமி என்பவர் தெரிவு செய்யப்பட்டார். இவரின் நியமனம் தமிழர் இனத்தை பிரதிபலிப்பதாகவும், இதுவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமாகவும் கருதப்பட்டது. பிற்காலத்தில், முஸ்லிம்கள் மத்தியில் பல மறு மலர்ச்சி கொள்கைகள் தோற்று விக்கப்பட்டதன் பயனாக முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றது. இதற்காக ஏ. எம். வாபுச்சி மரைகார், எம்.சி. சித்தி லெப்பே, முஹம்மது காசிம் அப்துல் ரஹ்மான் போன்ற குறிப்பிடத்தக்க இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். இதன் பயனாக 1889 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் நாள் முதலாவது முஸ்லிம் இனத்தவர் சட்டமன்ற சபைக்கு நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்டது. அக்கால சுதந்திர தேசம் கோட்பாடு மேலோங்கியதால் முஸ்லிம்களும் சுதந்திர தேசத்தில் தனி இனம் என்று அடையாளப்படுத்துவதற்கு இவர்களின் பங்கு அளப்பெருயது.
முதலாவது சட்டமன்ற சபைக்கு (1912-1921) 4 தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன, இதில் இலங்கையருக்கான தொகுதியில் நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவது இலங்கையரான பொன்னம்பலம் இராமநாதன் தெரிவுசெய்யப்பட்டார். இரண்டாவது சட்டமன்ற சபைக்கு (1921-1924 )16 தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் கிழக்கு மாகாணம் ஒரு தொகுதியாக கணிக்கப்பட்டு, அங்கு போட்டியின்றி ஈ. ஆர். தம்பிமுத்து தெரிவுசெய்யப்பட்டார். மூன்றாவது சட்டமன்ற சபைக்கு (1924-1931) 30 தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. முதலாவது முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படக்கூடிய முஹம்மதியன் தொகுதி மூன்றாவது சட்டமன்ற சபைக்கான தேர்தலில் ஏற்படுத்தப்பட்டன. இத்தொகுதியில் எச்.எம். மாகான் மாகார், என்.எச்.எம். அப்துல்காதர், ரி.பி. ஜாயா ஆகிய மூன்று முஸ்லிம்கள் முதல் முறையாக வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இருந்த போதிலும் இத்தொகுதியின் மூலம் தெரிவானவர்களினால் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தினை பூர்த்தி செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் 39 % முஸ்லிம்கள் இருந்த போதிலும், அன்று கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட மட்டக்களப்பு, திருகோணமலை தொகுதிகள் தமிழ்மக்களுக்கு சாதகமாகவே இருந்தன.

இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கு எல்லைகள் வகுக்கும் போது 50 தொகுதிகள் உருவாக்கப்பட்டது. வட மாகாணத்தில் 5 தொகுதிகளும், திருகோணமலை-மட்டக்களப்பு, மட்டக்களப்பு தெற்கு என கிழக்கில் இரு தொகுதிகளும் ஏற்படுத்தப்பட்டன. மட்டக்களப்பு தெற்கு தொகுதியே நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தை முஸ்லிம்களுக்கு உறுதிப்படுத்தும் தொகுதியாக இருந்தது. அரசுப்பேரவைக்கான முதலாவது தேர்தல் 1931 ஜூன் 20 யில் நடாத்தப்பட்டது. இதில் வடகிழக்கை பூர்வீகமாக கொண்டிராத எச்.எம். மாகான் மார்கார் முஸ்லிம் தேசிய வரையறையை பூர்த்தி செய்யும் மக்கள் பிரதிநிதியின் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். சட்டமன்ற சபைக்கான முஹம்மதியன் தொகுதியில் தெரிவான யாரும் வடகிழக்குக்கு வெளியில் அரசுப்பேரவைக்கான தொகுதிகளில் மீண்டும் தெரிவு செய்யப்படவில்லை.

1946 ஆம் ஆண்டு எல்.எம்.டி. டீ சில்வா எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய 89 வாக்காளர் தொகுதி மாவட்டங்களை உருவாக்கியது. இதுவே இலங்கையின் முதலாவது பாராளுமன்ற வாக்காளர் தொகுதி மாவட்டத்துக்கான எல்லை நிர்ணயமாகும். 89 தொகுதிகளிளும் கொழும்புமத்தி 3 அங்கத்தவர்கள் கொண்ட தொகுதியாகும். கடுகண்ணாவை, அம்பலாங்கொட-பலப்பிட்டிய, பதுளை, பாலாங்கொட ஆகியன 2 அங்கத்தவர்கள் கொண்ட தொகுதிகளாகும். தொகுதிவாரியாக 95 உறுப்பினர்களும் 6 நியமன உறுப்பினர்களுமாக 101 அங்கத்தவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். வடமாகாணத்துக்கு 9 தொகுதிகளும், கிழக்கு மாகாணத்துக்கு திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, மூதூர் தொகுதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்முனை, பொதுவில் என 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

இரண்டாவது எல்லை நிர்ணயம் 1959 ஆம் ஆண்டு டபிள்யூ. தல்கொடப்பிட்டிய எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது சிபாரிசுக்கு அமைய 145 வாக்காளர் தொகுதி மாவட்டங்களை உருவாக்கியது. 145 தொகுதிகளிளும் கொழும்பு மத்தி 3 அங்கத்தவர்கள் கொண்ட தொகுதியாகும். கொழும்பு தெற்கு, அக்குறன, மூதூர், மட்டக்களப்பு என்பன இரட்டை அங்கத்தவர்கள் தொகுதிகளாகும். தொகுதி வாரியாக 151 உறுப்பினர்களும் 6 நியமன உறுப்பினர்களுமாக 157 பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். வடமாணத்துக்கு 13 தொகுதிகளும், கிழக்கு மாகாணத்துக்கு திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, மூதூர் (2) தொகுதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு (2), அம்பாறை, பட்டிருப்பு, கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகள் என 12 உறுப்பினர்களுக்காக 10 தொகுதிகள் உருவாக்கப்பட்டது.

தேசியவாதம் மேலோங்கியிருந்த இக்காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள தேசியத்தின் நிலத்தொடர்பு அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முதலாவது முயற்சி 90 % சிங்கள சமூகத்தை கொண்ட அம்பாறை தொகுதி 1959 ஆம் ஆண்டின் எல்லை நிர்ணய உருவாக்கத்துடன் ஆரம்பமானது. தனது முதலாவது பிரதிநிதியினை இத்தொகுதியில் பெற்றுக்கொண்டதும் அடுத்தகட்ட நடவடிக்கையாக இத்தொகுதியை மையப்படுத்தி இப்பிரதேசத்தின் பூர்வீக சமூகங்களை புறக்கணித்து 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தை உருவாக்கினர். அரசியல் ரீதியாக்கவும், நிருவாக ரீதியாகவும் கிழக்கில் மேலாதிக்கத்தை செலுத்துவதற்கு இவ்விரு பிரதான நகர்வுகள் அவர்களுக்கு உறுதுணையாக அமைந்தது. கல்ஓயா திட்டத்தின் மூலம் புதிதாக குடியேற்றப்பட்ட கிராமங்கள், முறை கேடான அரச காணிப் பங்கீடு கிழக்கு மாகாண இனப்பரம்பலில் பாரிய மாற்றத்தையும் தமிழ்பேசும் சமூகங்களிடேயே சந்தேகத்தையும் தோற்றுவித்தது. கல்ஓயா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சுதந்திர இலங்கையின் பிதாவான டி.எஸ்.சேனநாயக்க கூறியது போன்று இங்கு பூர்வீக குடிகளான முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் நூற்றுக்கு ஐம்பது வீதம் இத்திட்டத்தில் குடியேற்றப்பட உள்ள 44 கிராமங்களும் இம்மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறினார். ஆனால், இம்மக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டது போல் 6 கிராமங்கள் மட்டுமே பூர்வீக குட்டிகளுக்கு வளங்கப்பட்டது. மிகுதி 38 கிராமங்களும் வெளிப்பகுதியில் இருந்து வந்த சிங்களவர்களுக்கு வளங்கப்பட்டன.

இப்பின்னணியில், 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட பின் மூன்றாவது எல்லை நிர்ணயம் நொய்ல் திட்டவல தலைமையில் 1976 யில் நடைபெறது. 160 வாக்காளர் தொகுதி மாவட்டங்களை உருவாக்க சிபாரிசு செய்யப்பட்டது. 160தொகுதிகளிலும் கொழும்பு மத்தி, நுவரெலியா – மஸ்கெலியா 3 அங்கத்தவர்கள் கொண்ட தொகுதிகளாகும். பேருவளை, ஹரிசஸ்பத்துவா, மட்டக்களப்பு, பொத்துவில் என்பன இரட்டை அங்கத்தவர்கள் தொகுதிகளாகும். தொகுதி வாரியாக 168 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். வடமாணத்துக்கு 14 தொகுதிகளும், கிழக்கு மாகாணத்துக்கு திருகோணமலை மாவட்டத்தில் சேருவில்ல, திருகோணமலை, மூதூர்; மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு (2), பட்டிருப்பு; அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் (2) என 12 உறுப்பினர்களுக்காக 10 தொகுதிகள் உருவாக்கப்பட்டது.
சிங்கள தேசியம் அம்பாறையில் அடைந்த வெற்றியினால் திருகோணமலை மாவட்டத்தில் 66 % சிங்கள பெரும்பான்மையை கொண்ட சேருவில்ல தொகுதியின் மூலம் தங்களது நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தினை இங்கும் உறுதிப்படுத்தினர். கந்தளாய் அல்லைக் குடியேற்றங்கள், குமரன் கட வன் எலத்திடம், கந்தளாய் சீனிக் கூட்டுத்தாபனம் என்பன சேருவில்ல தொகுதியை மையமாக வைத்து நடத்தப்பட்ட குடியேற்றங்களாகும். பொத்தான எனும் இடத்தில் 4000 ஏக்கர்காணியில்முஸ்லிம்கள் விவசாயம் செய்து வந்தனர். 30 வருடத்துக்குள் படிப்படியாக இம்மக்கள் தமது பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்களின் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரம் எவ்வாறு காலத்துக்கு காலம் பறிக்கப்படுகின்றது என்ற இது போன்ற தகவல்களை முஸ்லிம் உரிமைகள் நிறுவனம் பல ஆக்கங்களாக வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்க விடயமாகும்.

கிழக்கில் அரசியல் நகர்வுகள் இவ்வாறு இருக்கையில் 1972 ஆம் ஆண்டின் முதலாவது சோசலிச ஜனநாயக குடியரசு யாப்புக்கமைய நடைபெற ஒரேயொரு தேர்தலில் (1977) ஜே.ஆர். அரசின் வரலாறு காணாத அறுதிப் பெரும்பான்மை வெற்றி புதியகுடி யரசு யாப்பை அறிமுகப்படுத்த வழிகோழியது. அத்துடன் முதல் தடவையாக தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததும், புதிய யாப்பு சிறுபான்மை சமூகத்தை புறக்கணித்ததும், வடகிழக்கில் பேரினவாத அடக்குமுறை நாட்டை யுத்த சூழ்நிலைக்கு இட்டுச்சென்றது.
1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்புக்கமைய தொகுதிவாரி தேர்தல் முறை முடிவுக்கு வந்து விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக, ஜி.பி.எஸ். சில்வா தலைமையிலான எல்லை நிர்ணயகுழு 22 தேர்தல் மாவட்டங்களை உருவாக்கியது. இதில் 1978 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கம்பஹா நிருவாக மாவட்டம் ஒரு தேர்தல் மாவட்டமாகவும், வட மாகாணத்தில் மன்னார், வவுனியா, புதிய முல்லைத்தீவு நிருவாக மாவட்டங்கள் ஒன்றாக வன்னி தேர்தல் மாவட்டமாகவும், அம்பாறை நிருவாக மாவட்டம் திகாமடுள்ள தேர்தல் மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவர். விகிதாசார பிரதிநிதித்துவ முறையே மாகண சபைகள், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 1987 யில் அரசியல் யாப்பில் 13 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபைகள் தோற்றம் பெற்றன. இதன் மூலம் வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. வடகிழக்கில் பூர்வீகத்தை கொண்ட முஸ்லிம்களை இரு அரசும் கணக்கில் எடுக்கவில்லை. இச்செயற்பாடானது முஸ்லிம்களின் அரசியல் இருப்பை தமது பூர்வீகத்திலே கேள்விக் குறியாக்கி விட்டதனால் முஸ்லிம் தேசிய வாத கோட்பாடு மேலோங்கியது. முஸ்லிம்களின் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரம் முற்றாக அழிந்துவிடும் ஆபத்தை தவிற்ப்பதற்காக முஸ்லிம் தேசிய வாதிகளான எம்.எச். சேகு இஸ்ஸடீன், எம்.ஐ.எம். முஹியத்தீன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரபுடன் சேர்ந்து அரசியல் ரீதியாக முஸ்லிம் தேசிய கோட்பாட்டை நிலை நிறுத்த உழைத்தனர். முஸ்லிம் தேசியத்தின் இருப்பை தனது பூர்விக நிலத்தில் உறுதிப்படுத்த அரசியல் தீர்வாக கரையோர நிருவாக மாவட்டம், நிலத்தொடர்பற்ற அதிகார சபையை முன்வைத்தனர்.

இச்சூழ்நிலையில் ஹீவி ரொட்ரிகோ தலைமையில் 1988 ஆம் ஆண்டய எல்லை நிர்ணய சபை தனது அறிக்கையினை வெளியிட்டது. இதில் 22 தேர்தல் மாவட்டங்களும் 15 பிராந்திய தேர்தல் மாவட்டங்களும் உருவாக்கப்பட்டது. 1984 யில் உருவாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. வடகிழக்கு மாகாணசபை உருவாக்கத்தில் முஸ்லிம் தேசியம் புறக்கணிக்கப்பட்டதனால் நீங்கள் இத்தேர்தலை பகிஷ்கரிப்பீர்களா என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் கொடுத்தபதில் “ பேய்கள் ஆளும் சாம்ராஜ்ஜியத்தில் பிணம் தின்பதுதான் சாஸ்திரம் என்றால் நானும் அந்தப் பிணத்தை சாப்பிட்டு விட்டு அவர்களுடன் சரி சமமாக இருந்து பேச வேண்டும். இல்லாவிட்டால் எங்களுடையதையும் பறித்து விடுவார்கள். அதை காப்பாற்றுவதற்காகத்தான் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட்டு அந்த சபைக்கு உள்ளே சென்று முஸ்லிம் மாகணத்தைப் பற்றி பேச வேண்டும் என்றார்”. இவரின் ஆழமான இப்பதில் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தின் முக்கியத்துவத்தினை எங்களுக்கு உணர்த்துகின்றது. எனினும் அன்னாரின் திடீர் மரணம் முஸ்லிம் தேசியத்தின் அரசியல் இருப்பில் பாரிய வெற்றிடத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் தேசியவாதி எம்.எச். சேகு இஸ்ஸதீன் 1990 ஒக்டோபர் 31 கடைசி முஸ்லிம் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட அந்நாளைப்பற்றி குறிப்பிடும் போது இவ்வாறு கூறினார். முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசி, தமிழ் கலாசாரத்தைப் பின்பற்றி, தமிழர் வாழும் இடங்களிலேயே வாழ்ந்து, தமிழர்களைப் போல் பொருளாதாரத்தை வைத்திருந்தும் வெளியேற்றாப்பட்ட அந்நாளே தமிழ் தேசியம் முஸ்லிம் தேசியத்தை அங்கீகரித்த நாள் என்றார். சுமார் மூன்று தசாப்த யுத்தம் முடிவடைந்ததன் பிற்பாடு நல்லாட்சி என்ற கோஷத்தில் ஆட்சியை கைப்பற்றிய தேசிய அரசு பாராளுமன்றத்தை அரசியல்யாப்பு சபையாக மாற்றியுள்ளது. இவ்வரசியல் யாப்பு சபையில் முஸ்லிம் காங்கிரஸ், தலைவர் அஷ்ரப் முன்வைத்த கரையோர மாவட்டத்தைப் பற்றி எதுவுமே கூறாத நிலையில், மக்கள் காங்கிரஸ் அதற்கு ஒப்பான ஒலுவில் மாவட்டத்தை கோரியிருப்பது நல்லதொரு சமிக்ஞை.

நல்லாட்சி என்ற தேசிய அரசு மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முறையில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையினை நீக்கி கலப்பு முறையினை அறிமுகப்படுத்தியது. மாகாண சபைககளை 50:50 என்ற விகிதத்திலும், உள்ளுராட்சி மன்றங்களை 60:40 என்ற விகிதத்திலும் இக்கலப்பு முறை தேர்தல் நடை பெற தீர்மானிக்கப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை அவசர அவசரமாக நடத்துவதற்காக புதிய சபைகள் உருவாக்கம், வட்டார எல்லை பிரிப்பில் முஸ்லிம் பிரதேசங்களில் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. பரீட்ச்சாத்தகரமாக நடத்தப்பட்ட இத்தேர்தல் தற்பொழுது வேண்டாம் என்று இம்முறையை கொண்டுவர பாடுபட்டவர்களினாலேயே சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்நிலையில், கலாநிதி கே. தவலிங்கம் தலைமையிலான மாகாண எல்லை நிர்ணயகுழு தனது அறிக்கையினை சமர்பித்துள்ளது. மாகாணங்களுக்கான தொகுதிகள் 222 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 175 தொகுதிகள் சிங்களவர்களுக்காகவும், 25 தொகுதிகள் தமிழர்களுக்காகவும், 13 தொகுதிகள் முஸ்லிம்களுக்காகவும், 9 தொகுதிகள் இந்திய தமிழர்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் கூற்றுப்படி முஸ்லிம்களுக்கான 13 தொகுதிகளிலும் 9 யில் மாத்திரமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நடவெடிக்கையானது முஸ்லிம்களின் நிலத்தொடர்புள்ள அரசியல் இருப்பை சூட்சகமாக பறிப்பதில் எவ்வாறு இக்குழு செயற்படுகின்றது அதற்கு எவ்வாறு முஸ்லிம் பிரதிநிதிகள் துணை போகின்றார்கள் என்பதை அறிய முடியும்.

எத்தேர்தல் முறை வந்த போதிலும் தமிழ்பேசும் சமூகங்களின் பூர்வீக நிலங்களின் தற்போதைய எல்லைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படா வண்ணம் மாகாண தொகுதிகள் பிரிக்கப்பட்ட வேண்டும். அத்துடன் தற்போதைய திகாமட்டுள்ள தேர்தல் மாவட்டத்தில் 99 % குடியேற்றப்பட்ட சிங்களவர்களை கொண்ட அம்பாறை தொகுதி வேறு தேர்தல் மாவட்டமாகவும், சம்மாந்துறை, பொதுவில், கல்முனை தொகுதிகள் ஒன்றாக வேறு தேர்தல் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்ட வேண்டும் என்று முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி கூறுகின்றார். முஸ்லிம்களின் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய இன விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகணத்துக்கு ஒதுக்கப்பட்ட 18 மாகாண தொகுதிகளில் அம்பாறையில் 3 தொகுதிகளும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் தலா 2 தொகுதிகளும் என முஸ்லிம்களுக்கு 7 தொகுதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழர்களுக்கு அம்பாறையில் 1 தொகுதியும், திருகோணமலையில் 2 தொகுதிகளும், மட்டக்களப்பில் 4 தொகுதிகளுமாக 7 தொகுதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சிங்களவர்களுக்கு அம்பாறையில் 3 உம், திருகோணமலையில் 1 உம் மொத்தம் நான்கு தொகுதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

2012 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி 99 % சிங்களவர்களை கொண்ட அம்பாறை தொகுதி 212,182 பேருக்கு 2049 ச.கி. பரப்பை கொண்டுள்ளது. ஏனைய தமிழ்பேசும் பெரும்பான்மையினை கொண்ட 3 தொகுதிகளும் 514,781 பேருக்கு 2366 ச.கி. பரப்பை கொண்டுள்ளது. எனவே தற்போதைய அம்பாறை தொகுதியை 3 அங்கத்தவர்கள் கொண்ட தொகுதியாக மாற்றலாம் அல்லது மூன்றாகப் பிரிக்கலாம். இதை விடுத்து தமிழ்பேசும் சமூகங்களின் எல்லைகளை மேலும் குறைப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வரலாற்றில் தொடர்ச்சியாக எல்லை நிர்ணயம் நடைபெறும் போது சிறுபான்மை சமூகங்களின் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தை பலமிழக்கச் செய்ய அவர்களின் நிலங்கள் திட்டமிட்டு சுரண்டப்பட்டு வந்துள்ளது. இம்மாகாண தொகுதிகள் அங்கீகரிக்கப்படுமானால் எதிர்காலத்தில் பாராளுமண்டத்திற்கும் இத்தொகுதிகளையே பயன்படுத்தலாம். எனவே சிறுபான்மை சமுகம் வரலாற்றை மீட்டு செயற்பட வேண்டிய காலம் இது. ஒட்டுமொத்த சிறுபான்மை தேசியங்களின் மூலம் ஆட்சியில் உள்ள நல்லாட்சியில் சிறுபான்மை சமூகங்களின் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரம் மழுங்கடிக்கப்படுவது தற்கொலைக்குச் சமமா? அல்லது அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள தூக்கு கைறா?

எச்.ஏ. ஆலிப் சப்ரி
நன்றி வீரகேசரி 2018-08-10


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here