*புனித கங்கையாகிப்போன பொண்டுகள் சேனையும் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் எதேச்சதிகாரமும்*

0
198

*பொண்டுகள் சேனை*

பொண்டுகள் சேனை என்பது கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நிர்வாக எல்லையில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள இயற்கை வளம் கொண்ட மனங்களை ஈர்க்கும் ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள விவசாய நீர்ப்பாசனத்திற்கான நீரோடையும் நிழல்தரும் அடர்ந்த மரங்களும் விவசாய நிலமமுமம் மக்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் உள்ள சகல இன மக்களும் இவ்விடத்தை ஒரு சுற்றுலாத் தலமாக தங்களது ஓய்வு நேரங்களை பொழுதுபோக்காக கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். குடும்பங்களாகவும் நண்பர்களாகவும் கழகங்களாகவும் அமைப்புகளாகவும் இப்பிரதேச வாழ் மக்களும் அண்டை அயல் கிராமங்களில் வாழும் மக்களும் அவ்விடத்திற்கு வருகை தந்து சுற்றுச்சூழலில் கூடாரமடித்து உணவுகளை சமைத்து உண்டு களித்து அங்கு ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் குளித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

**பொண்டுகள் சேனை செல்வதற்கு தடை*
*

இவ்வாறு
தினந்தோறும் அங்கு மக்கள் செல்வதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் சுகாதார சீர்கேடும் ஏற்படுவது தவிர்க்க முடியாது.இவற்றை காரணம் காட்டி அங்கு செல்வதற்கு கோறளைப் பற்று பிரதச சபை தடை விதிதத்துள்ளது. அதற்காக இப்பிரதேசத்திற்கு மக்கள் வரக்கூடாது என தடை விதிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. இப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் தமது பொழுதுகளை களிப்பதற்கு பொருத்தமான இடங்கள் பற்றாக்குறையாக இருக்கும் சூழலில் இப்பிரதேசத்திற்கு செல்வதை பிரதேச சபை தடை செய்தது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அப்பிரதேசத்தில் தடை உத்தரவு அறிவித்தல் பதாதை ஒன்றினை நிறுவி இத்தடையையை கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

*தவிசாளரின் எதேச்சதிகாரப்போக்கு*

உண்மையில் கோரளைப்பற்று பிரதேச சபையில் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் ஆளும் தற்போதைய நிர்வாகத்திற்கு பங்காளர்களாக இருந்தபோதும் அவர்களிடமோ அல்லது சபையிலோ இந்த விடயம் குறித்து கலந்தாலோசனை எதுவும் செய்யாது இத்தகையதொரு தீர்மானத்தை தவிசாளர் அறிவித்திருப்பதானது அவரது எதேச்சதிகார போக்கையே காட்டுகின்றது.

*புனித பிரதேசமா* ?

உண்மையில் இந்தப் பிரதேசம் இதுவரை காலமும் அவ்வாறானதொரு புனித பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்ததா? என்ற கேள்விகள் பிரதேச மக்களால் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் இப்பகுதி புனித பிரதேசமாயின் அப்போதுதான் இப்பகுதியை பார்வையிட அதிக மக்கள் வரத்தொடங்குவார்கள். மக்களுக்கு தேவையான அதிக வசதிகளை சபை செய்து கொடுப்பதும் பிரபல்யப்படுத்துவதும் சபையின் மையாகும்.

*இனத்துவேச செயற்பாடா?*

இப்பகுதியை அதிகம் சுற்றுலாத்தலமாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மக்களே பயன்படுத்தி வருவதால் அவர்களை தடுத்து நிறுத்துவதற்கான இனத்ததுவேச ரீதியான செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும் எனச் சிலர் குறிப்பிடுவது எந்த வகையிலும் தவறானதன்று. கோரளைப்பற்று பிரதேச சபையானது தமிழ் சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதன்று இங்கு பெருமளவிலான முஸ்லிம்களும் வாழ்கின்றனர். பிரதேச சபையை ஆளும் TMVP கட்சியினருக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதன் மூலமே ஆட்சியை நிறுவினார்கள். எனவே உறுப்பினர்களது அபிப்பிராயங்களைப் பெறாது பொதுவாக எந்த ஒரு பிரேரணையையும் இவ்விடயம் குறித்து சபையில் கொண்டு வராது இத்தகையதொரு தடையுத்தரவை அறிவித்திருப்பதானது இரு சமூகங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்திவிடும் செயல் ஆகும் என்பதை தவிசாளர் புரிந்துகொள்ள வேண்டும்.

*புனித பிரதேச பிரகடன அதிகாரம் சபைக்கு உண்டா?*

உண்மையிலேயே ஒரு பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனம் செய்யும் அதிகாரம் தனிப்பட்ட ரீதியில் பிரதேச சபை தவிசாளருக்கு அல்லது பொதுவாக பிரதேச சபைக்கு இருக்கின்றதா ? என்ற கேள்வி இங்கு மக்கள் மத்தியில் வெளிப்படுகிறது. ஓர் இடத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவது வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சட்ட ரீதியான ஏற்பாடாகும். அதுவெல்லாம் இல்லாமல் எதுவித சட்டரீதியான ஏற்பாடுகளும் இன்றி ஓரிடத்தை குறிப்பிட்ட சில நபர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதால் அது புனித பிரதேசமாக ஆகிவிடப் போவதில்லை என்பதனை கோரளைப்பற்று பிரதேச சபையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*ஒழுங்கு படுத்துவதே பிரதேச சபையின் கடமை*

இப்பிரதேசத்தில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணம் காரணமாக பிரதேசத்தின் பாதுகாப்போ பிரதேசத்தின் கங்கையோ அல்லது நீரோடையோ சுற்றுச்சூழலோ பாதிக்கப்படுமாக இருந்தால் அதனை ஒழுங்குபடுத்தி தேவையான வழிமுறைகளைச் செய்து முறையான சுற்றுலாத்தலமாக மாற்றுவதே பிரதேச சபை செய்யவேண்டிய பணியாகும். இதற்குத்தான் பிரதேச சபைக்கு பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அசுத்தமடைகிறது என்பதற்காக தடை உத்தரவு பிறப்பித்தது எந்த வகையிலும் அபிவிருத்தி செயற்பாடாகவோ அல்லது அறிவுபூர்வமான செயற்பாடாகவோ இருக்க முடியாது. கோரளைப்பற்று பிரதேச சபை இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி முறையான ஏற்பாடுகளுடன் அவ்விடத்தை மக்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மக்கள் பிரதிநிதிகளின் கடமை*

சபையில் இருக்கின்ற பிரதேச சபை உறுப்பினர்கள் குறிப்பாக முஸ்லிம் உறுப்பினர்கள் சபை தவிசாளரின் எதேச்சதிகாரமான இப்போக்கை கண்டித்தும் தீர்மானத்தை எதிர்த்தும் எதிர்வரும் சபை அமர்வுகளை புறக்கணித்து அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் அனைவரதும் உரிமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும. இல்லாத போதும் சிவில் சமூகங்கள் தவிசாளருக்கு எதிராகவும் சபைக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இத்தளத்தை முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*அஷஷெ்ய்க் ஏ.எல். பீர்முஹம்மது காஸிமி M.A*


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here