சரியான தலைமைத்துவங்களை வேண்டி நிற்கும் வாழைச்சேனை சமூகம்

0
23

எந்த ஒரு சமூகத்திற்கும் சரியான தலைமைத்துவம் தேவை என்பதை யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அல்ல. அது ஒரு நாடாக இருந்தாலும்,சமூகமாக இருந்தாலும், சமய தலைமைத்துவமாக இருந்தாலும் சரியே.

அந்த வகையில் வாழைச்சேனை பிரதேசத்தில் பல்வேறு ஆளுமைகள், படித்த மட்டங்கள் இருந்தபோதிலும் இடம், பொருள் அறிந்து தலைமை தாங்கக் கூடிய ஒரு தலைமை இல்லை என்பது மிகப்பெரிய குறைபாடாகும். ஒரு தலைமைத்துவத்துக்கு ஆன்மீக அறிவு மற்றும் உலக அறிவு என்பன கட்டாயம் இருக்க வேண்டும்.

ஆனால் அண்மைக்காலமாக வாழைச்சேனையில் இடம்பெறுகின்ற ஒரு பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினையை பொருத்தவரைக்கும் அதனை கையாளுகின்ற தலைமைகளுக்கு ஆன்மீக அறிவோ உலக அறிவோ இல்லை என்பதை நேற்று வெள்ளிக்கிழமை (15/03/2019) இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

ஏனெனில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதனை தலைமை தாங்கி நடத்தியவர்களின் பேட்டிகளை பார்க்கின்ற போது அவர்களுக்கு ஆன்மீக அறிவிலும், உலக அறிவிலும் குறைபாடு இருக்கின்றது என்பதை நாம் எல்லோரும் கவலையோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும். அவ் ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடாத்தியவரின் கருத்தை பார்க்கின்றபோது இப் பள்ளிவாயல் கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைய போவதாகவும், ஒற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் நிம்மதி இழந்து வாழப் போவதாகவும், இவர்கள் தீவிரவாதத்தை பரப்பப்போவதாகவும் கூறுகின்றார்.

உண்மையில் அவர் சொன்ன கருத்தை புத்திஜீவிகளாகிய எல்லோரும் அமைதியாகவும் ஆழமாகவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. உண்மையில் இவர் சொல்வது போன்று அவர்களால் நிர்வகிக்கப்படுகின்ற எட்டு பள்ளிவாயல்களால் ஏற்படாத சுற்றுச்சூழல் மாசு; இப்பள்ளிவாயலால் மாத்திரம் எவ்வாறு ஏற்படும் என்பதையும் எங்கோ இருக்கின்ற பள்ளிவாயலால் தமிழ் முஸ்லிம் மக்களின் நிம்மதி எவ்வாறு கெடும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் அவர் கூறுவது போன்று தீவிரவாதம் பரப்பப்படுகிறது என்றால் அதற்குரிய ஆதாரத்தையும் சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிராக, சிறு விடயங்களை வைத்துக் கொண்டே பெரிய கலவரத்தை ஏற்படுத்த காத்துக்கொண்டிருக்கும் கழுகுப் பார்வையிலிருந்து எம் சமூகத்தை காக்க வேண்டிய சமூகத் தலைவர்கள்; இவ்வாறான போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதானது எந்தளவிற்கு ஆரோக்கியமானது என்பதை எமது ஆளுமைகள் சிந்திக்க வேண்டும்.

மேலும் அவர் கூறுகின்ற போது சட்டவிரோதமாக கட்டப்படும் இக் கட்டிடத்திற்கு இப்பிரதேச சபை தடைவிதிக்கவில்லை என்றால், இனிவரும் காலங்களில் எமது மக்களால் கட்டப்படும் எந்தக் கட்டிடத்துக்கும் அனுமதி பெறப்பட மாட்டாது என்று கூறுகின்றார். இவ்வாறு ஒரு சமூகத்தை வழி நடாத்துகின்ற தலைவரே கூறுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இன்னுமொருவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆயுத கண்காட்சி நடத்தியதாகவும், தொலைபேசி வாங்கி பாதுகாப்பு படையினருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இவர்கள் காணிகளைப் பிடித்து பொதுமக்களுக்கு காணிப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவும் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன் உண்மைத்தன்மை பற்றி அங்குள்ள ஒரு ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு மழுப்பலான பதிலையே அளித்தார். உண்மையில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதால் தவ்ஹீத் ஜமாத்தை மாத்திரம் குற்றம்சாட்டவில்லை மாறாக பாதுகாப்பு தரப்பினரையும், ஏனைய முஸ்லிம் சமூகத்தையும்தான் குற்றஞ்சாட்டுகின்றார். சுருங்கக் கூறின், இவர்கள் கூறிய கருத்துக்களில் தூரநோக்கோ சமூகப் பற்றோ எதுவும் இல்லை. மாறாக சமூகத்தை காட்டிக்கொடுக்கும் முன்னெடுப்புகளேயாகும். மாற்று இனத்திலிருந்த பல சேனாக்கள் ஓய்ந்துள்ள நிலையில், எமக்குள் உள்ள சில சேனாக்கள் கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளார்கள். இவர்களின் இந்த செயற்பாடானது இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களினதும் இருப்புக்கு மிகவும் அச்சுறுத்தலான விடயம் என்பதை அவர்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

எனவே இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை பார்க்கின்ற போது இவர்களின் ஆன்மீக, உலக அறிவைப் பார்த்து வியந்து போவதா? அல்லது இவ்வாறானவர்களை தலைவர்களாகவும் நிர்வாகிகளாகவும் தெரிவு செய்தவர்களின் நிலைமையை பார்த்து கவலைப்படுவதா என்று தெரியவில்லை. இறைவன் தான் அவர்களுக்கு நல்ல சிந்தனையையும் நேர்வழியையும் காட்ட வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை.

கம்பெடுத்தவர்கள் எல்லாம் சண்டை காரனாகவும், ஹாஜிப்பட்டம் வைத்தவர்கள் எல்லாம் தலைவர்களாகவும், மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் பேச்சாளர்களாகவும் ஆக முடியாது.

உண்மையில் அவர் ஒரு சண்டை காரனா அல்லது தலைவரா அல்லது பேச்சாளரா என்பதை ஒரு பார்வையாளனால்தான் தீர்மானிக்க முடியும். நான் ஒரு பார்வையாளனாக தீர்மானித்துவிட்டேன். இவர்கள் யார் என்று. எது எவ்வாறு இருந்த போதிலும் இனிவரும் காலங்களிலாவது வாழைச்சேனை வாழ் எம்சமூகத்திற்கு சிறந்த உலக, ஆன்மீக ஆளுமை உள்ள புத்திஜீவிகள் தலைவர்களாகவும் நிர்வாகிகளாகவும் வர பிராத்திப்போமாக

MLA. Samad. (BBA) (JP)


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here