#செல்லாக்_காசு_அரசியல்!

0
17

விடிவெள்ளி பத்திரிகை கட்டுரை
++++++++++++
#செல்லாக்_காசு_அரசியல்!
+++++++++++
#எஸ்_றிபான் –
இலங்கை முஸ்லிம்களின் அரசியலை பலமிக்காத கட்டியெழுப்ப வேண்டுமென்று முஸ்லிம் ஆர்வலர்களினால் பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றன. ஆயினும், அதற்கான எந்த முன் ஆயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்;தைப் பற்றிச் சிந்திக்காது தங்களின் சுய அரசியல் இலாபத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதே காரணமாகும். இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் தமது அரசியல் நடவடிக்கைகளை பேரினவாதக் கட்சிகளுடனே வைத்துக் கொண்டிருந்தார்கள். இதனால், முஸ்லிம்களின் அரசியல் பலம் கட்டியெழுப்பப்படவில்லை. இத்தகையதொரு சூழலில் நாட்டில் ஏற்பட்ட யுத்தமும், அதனைத் தொடர்ந்து வந்த இனரீதியான மோதல்கள் காரணமாகவும் முஸ்லிம்களுக்கும் தனித்துவமானதோர் அரசியல் கட்சி அவசியமென்று உணரப்பட்டது. இதற்கு அமைவாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. இதன் பின்னர் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றதொரு கட்சியாகவும், ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது. முஸ்லிம்களின் குரல் முஸ்லிம் காங்கிரஸ் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

#மீட்சியில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டுக் கொண்டிருந்த எம்.எச்.எம்.அஸ்ரப் 2000.10.16ஆம் திகதி ஹெலிக்கொப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டார். இவரது மரணம் எவ்வாறு நடந்ததென்றும், இதற்கு காரணம் யாரென்றும் இன்று வரைக்கும் மர்மமாகவே இருக்கின்றது. இக்கொலையை விடுதலைப் புலிகள்தான் மேற்கொண்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டன. ஆயினும், மரண விசாரணை அறிக்கை இன்று வரைக்கும் வெளிவராது இருப்பதனை வைத்துப் பார்க்கும் போது, அஸ்ரப் திட்டமிட்டவாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வலுவாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதே வேளை, அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கூட அவரின் மரண அறிக்கையை அரசாங்கத்திடம் பெற்றுக் கொள்ள முயற்சிகளை எடுக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்ததன் பின்னரே பசீர் சேகுதாவூத் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக அஸ்ரப்பின் மரண அறிக்கையை கோரியிருந்தார். இதனை ஒரு அரசியல் நகர்வாக மட்டுமே பார்க்க முடியும்.

மர்ஹும் அஸ்ரப்பின் திடீர் மரணம் முஸ்லிம்களின் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரைக்கும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியலில் அன்று ஏற்பட்ட இழப்பு இன்று வரைக்கும் நிரப்பப்படவில்லை. அஸ்ரப்பின் இழப்பிலிருந்து முஸ்லிம் சமூகம் மீட்சி பெறும் வகையில் அரசியல் தலைமை உருவாகவில்லை.

அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் அரசியல் தலைமை யாரென்ற கேள்வி எழுப்பப்பட்டது. முஸ்லிம்களுக்கு மீளவும் மர்ஹும் அஸ்ரப்பைப் போன்றதொரு அரசியல் தலைமை உருவாகிவிடக் கூடாதென்பதில் இலங்கையிலுள்ள பேரினவாத சக்திகளும், அவற்றுடன் தொடர்புடைய இனவாத சக்திகளும் மிகவும் முனைப்பாக செயற்பட்டன. அஸ்ரப்பின் மரணத்தோடு கட்சிக்கு இணைத் தலைவர்களாக பேரியல் அஸ்ரப், ரவூப் ஹக்கீம் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதன் பின்னணியில் அன்றைய அரசாங்கம் இருந்தது. பின்னர் கட்சிக்கு ஏக தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். பேரியல் அஸ்ரப் நுஆ கட்சியை வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டார். ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டார். இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கம் திசை மாறியது. கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டி, கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற போர்வைக்குள் ஏகதலைமையை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதே அன்றி கட்சி தொடங்கப்பட்ட பணியை செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதற்கு அன்றைய உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பாக இருந்தார்கள்.

முஸ்லிம் காங்கிரஸிற்குள் மேலும் தலைமைத்துவப் போட்டிகளும், முரண்பாடுகளும் வலுத்துக் கொண்டே சென்றன. இதனால், மருதூர் கனி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், றிசாட் பதியூதின், எம்.எஸ்.அமீர் அலி, அன்வர் இஸ்மாயில், எச்.எம்.எம்.ஹரீஸ் (இவர் தேர்தலொன்றில் போட்டியிட்டு தோல்வியடைந்து பின்னர் மு.காவுடன் இணைந்து கொண்டார்), நஜீப் அப்துல் மஜீட், எம்.எஸ்.உதுமாலெப்பை என முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த பலரும் கட்சியை விட்டு விலகினார்கள். இவர்கள் சிலர் பேரினவாத கட்சிகளுடன் இணைந்து கொண்டார்கள். அதாவுல்லாஹ், றிசாட் பதியூதீன், ஹஸன்அலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு தனிக்கட்சிகள் தொடங்கிய போதிலும் முஸ்லிம்களின் அரசியல் பலம் கட்டியெழுப்பப்படவில்லை. உரிமை அரசியலில் தொடங்கிய முஸ்லிம்களின் அரசியல் போராட்டம் மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் சுய அரசியலை பாதுகாத்துக் கொள்வதே முதற் கடமை என்றாகி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆயினும், இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸின் இடத்தை மாற்றுக் கட்சிகளினால்; பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ் அதன் பழைய செல்வாக்கு நிலையிலும், தனித்துவத்திலும் படிப்படியாக கீழிறங்கிக் கொண்டிருக்கின்றது. அதே வேளை, மாற்றுக் கட்சிகளின் குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக உயர்வடைந்து கொண்டு செல்லுகின்றது. இதனை கடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு அதிகரிப்பு அக்கட்சியின் கொள்கைக்கு ஏற்பட்டதல்ல. மாறாக, முஸ்லிம் காங்கிரஸின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் மறுவடிவம் எனலாம். தமது எதிர்ப்பைக் காட்டுவதாக இருந்தால் மாற்று அணியில் இணைந்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆகவே, மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின் ஏற்பட்ட அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் இன்னும் நிரப்படவில்லை. அத்தோடு முஸ்லிம்கள் அஸ்ரப்பின் மரணத்திலிருந்து இன்னும் மீட்சி பெறவில்லை. இன்று வரைக்கும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் ஜீவனோபாயம் அஸ்ரப் எனும் நாமத்தை உச்சரிப்பதிலும், உணர்ச்சியூட்டுவதிலும்தான் தங்கியுள்ளது.

#கோணல்_போக்கு

முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் கட்சி இருக்க வேண்டும். அது முஸ்லிம்களின் குரலாக செயற்பட வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் பின்னால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அணி திரண்டார்கள். முஸ்லிம்களின் அரசியல் பெரும்பாலும் ஒரு முகப்படுத்தப்பட்டது. இதனால், முஸ்லிம்களின் அரசியல் ஆளுமை கொண்டதாக மாறியது. இது நீடிக்கவில்லை. மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தன் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டிகள், பிரதேசவாதம், அமைச்சர் பதவிகளின் மீதான நாட்டம், குடும்ப உறுப்பினர்களை வாழ வைப்பதற்காக கட்சியை பயன்படுத்தும் நிலை, பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக குறுக்கு வழிகளை தேடிக் கொண்டமை, தலைமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மாத்திரம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன, தலைவர்களை திருப்திப்படுத்தி ஊதியம் பெறும் ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டமை, தலைமையை அடிபணிய வைத்து காரியம் சாதிப்பதற்கு தலைமையின் பலவீனங்களை பயன்படுத்தும் குழு போன்ற பல காரணிகள் முஸ்லிம் அரசியலுக்குள் தலையெடுத்துக் கொண்டன. இதனால், ஒரு முகப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம்களின் அரசியல் கோணலாக மாறியது.
முஸ்லிம் அரசியலில் எற்பட்டுள்ள கோணலை சரி செய்வதற்கு எந்த நடவடிக்கையும், திட்டமும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எந்தவொரு முஸ்லிம் கட்சியிடமும் கிடையாது. முஸ்லிம் அரசியலில் கோணல் ஏற்பட்ட போதிலும் பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்களின் அரசியல் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது தொடர்ந்து கொண்டிருந்தது. என்றாலும், கட்சிக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்ற சிந்தனை கட்சியின் தலைமைக்கோ, உயர்பீட உறுப்பினர்களுக்கோ ஏற்படவில்லை என்றே கூறுதல் பொருத்தமாகும். கட்சிக்கு உறுதியான தலைமையை உருவாக்குவதற்கும், கட்சியின் கொள்கைகளையும், கட்டமைப்பையும் மீளவும் கட்டியெழுப்புவதற்குமுரிய நடவடிக்கைகளை எடுக்காது பங்கு இலாபச் சண்டையிலேயே உயர்பீட உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள். இதற்கு இன்று முஸ்லிம் காங்கிரஸை விட்டும் தூரமாகி புதிய கட்சிகளை ஆரம்பித்த எவரும் விதிவிலக்கல்ல. தங்களின் நலன்கள் பாதிக்கப்பட்ட போதே தலைமைக்கு எதிரான கோசங்களை முன் வைத்து வெளியேறினார்களே அல்லாமல் சமூகத்தின் நலன்களை மையப்படுத்தி யாரும் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகவில்லை.

இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ் கொள்கைகளை மறந்து கோணல் நிலையை அடைந்துள்ளது. அதனால், அஸ்ரப்பின் கொள்கைகளை வாழ வைப்பதற்கு புதிய கட்சியை ஆரம்பித்துள்ளோம் என்று கூறியவர்களும் முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள கோணலை சரி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முஸ்லிம்களின் அரசியல் கடந்த 15 வருடங்களாக பலவீனப்பட்டுக் கொண்டு செல்லுகின்றது. மர்ஹும் அஸ்ரப் மரணிக்கும் போது ஒப்படைத்த முஸ்லிம்களின் அரசியல் பலம் படிப்படியாக சிதைக்கப்பட்டு போனமைக்கு ரவூப் ஹக்கீம் மட்டும் பொறுப்புதாரியில்லை. இறுதியாக முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் கட்சியை முன்னெடுத்துக் கொண்டு சொல்லும், பசீர் சேகுதாவூத், ஹஸன்அலி உட்பட உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைமையோடு முரண்பட்டு புதிய கட்சிகளை ஆரம்பித்தவர்களும், பேரினவாத கட்சிகளுடன் இணைந்து கொண்டவர்களும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்.

#பேரினவாதக்_கட்சிகளுடன்_சங்கமம்

முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் எல்லா முஸ்லிம் கட்சிகளினாலும் பேரினவாதக் கட்சிகளிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் முஸ்லிம் கட்சிகள் சங்கமித்துள்ளன. இந்த சங்கமத்திலிருந்து மீள முடியாத நிலையிலேயே எல்லா முஸ்லிம் கட்சிகளும் உள்ளன. முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு பேரினவாதக் கட்சிகளும் முன் வைக்கும் தீர்வினை ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே முஸ்லிம் அரசியல் தலைமைகள் உள்ளன. முஸ்லிம்களுக்கு புதிய அரசியல் யாப்பு வந்தாலும் தீர்வில்லை. இன்றைய அரசியல் யாப்பு தொடர்ந்தாலும் தீர்வில்லை.
அரசியல் யாப்பில் 18வது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்தன. 18வது திருத்தத்தில் உள்ளவற்றை இல்லாமல் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 19வது சட்ட மூலத்திற்கும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இது போன்று அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளையும் அங்கிகரித்துச் செல்லும் நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன. அத்தோடு. பேரினவாதக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடும் அவ்வாறே உள்ளது.

மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியிலும், இன்றைய ஆட்சியிலும் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. இவ்வாறு முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது அன்றும், இன்றும் ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ அத்தாக்குதல்களை கண்டிக்கவில்லை. அரசாங்கத்தின் தலைவர்கள் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களை கண்டித்தால் பௌத்த இனவாதிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியேற்படும் என்று அச்சப்பட்டார்கள். அதே வேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அரசாங்கத்தை கண்டிப்பதற்கு அச்சமடைந்தவர்களாக உள்ளார்கள். இவ்வாறு அச்சமடைந்துள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மாற்று அணியினரை குறை கூறுவதில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்கள் யுத்த காலத்திலும், அதன் பின்னரும் இனவாதிகளினால் தாக்கப்பட்டுள்ளார்கள். நஸ்டமடைந்துள்ளார்கள். அவற்றிக்கு பூரணமான நஸ்டஈட்டைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இந்நிலை போதாதென்று முஸ்லிம் கட்சிகள் உள்ளக முரண்பாடுகளில் சிக்கியுள்ளன. இதிலிருந்து கூட மீள்வதற்கு வழி தெரியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன.

முஸ்லிம் கட்சிகள் எதுவும் தம்மை சுயமதிப்பீடு செய்து கொண்டதாகத் தெரியவில்லை. தவறுகளை திருத்திக் கொள்வதற்கு எந்தவொரு கட்சியும் தயாரில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 15 வருடங்களாக மாற்றுப் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஏனைய முஸ்லிம் கட்சிகள் பேரினவாதக் கட்சிகளின் வண்டியில் வழிப் போக்கர்களாக ஏறிக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் உள்ள முஸ்லிம் கட்சிகள் தாங்கள் இணக்க அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், இதன் மூலமாகவே முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும், அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இணக்க அரசியலில் முஸ்லிம்களின் எந்த அடிப்படை உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு கூட தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. முஸ்லிம் கட்சிகள் உண்மையாக இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தால் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். முஸ்லிம் கட்சிகள் சரணாகதி அரசியலைச் செய்து கொண்டிருப்பதனால்தான் எதனையும் அழுத்தங்களுக்கு உட்படுத்தி சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முடியாத நிலையில் இருக்கின்றன.

#பலமான_தலைமை_வேண்டும்

முஸ்லிம் கட்சிகள் சமூகத்தை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், பேரினவாதக் கட்சிகள் முஸ்லிம்களை கணக்கில் எடுக்காத வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்திடம் வாக்களித்தவற்றை அரசாங்கம் நிறைவேற்றாத நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றன. ஆதலால், முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத கட்சிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகையதொரு சூழலில் முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வேண்டுமென்று பரவலாக உணரப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல் பலத்தின் மீது பொறாமை அல்லது அச்சம் கொண்;ட எதிர்தரப்பு அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் அரசியலை சிதைப்பதில் வெற்றி கண்டுள்ளது. முஸ்லிம் அரசியலை சிதைத்து செல்லாக்காசாக்கி வைத்துள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகளை சரணாகதி அடைய வைத்துள்ளார்கள். அமைச்சர் பதவிகள்தான் முஸ்லிம்களின் உரிமைகள் என்று முஸ்லிம் அரசியல் தலைவர்களையே சொல்ல வைத்துள்ளார்கள். முஸ்லிம் சமூகமும் தமது பிரதிநிதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் போது பட்டாசு கொளுத்தி மகிழும் நிலைக்குள்ளாகி உள்ளது. இத்தகையதொரு வாக்காளர் கூட்டம் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வரைக்கும், இணக்க அரசியல் எனும் போர்வைக்குள் சரணாகதி அரசியலைச் செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் தொடர்ந்தும் அரசியலில் நிலைத்திருக்கும் வரைக்கும் முஸ்லிம் அரசியல் செல்லாக்காசு நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கும். இதிலிருந்து மீட்சி பெற வேண்டுமாயின் முஸ்லிம் இளைஞர்கள் ஜனநாயக வழியில் போராட்டங்களை மேற்கொண்டு சிறந்த அரசியல் தலைமையை கண்டு கொள்ள வேண்டும். அல்லது உருவாக்க வேண்டும். ஒரு சமூகத்தின் விடிவு நல்ல சிந்தனையிலும், இளைஞர்களின் கைகளிலுமே உள்ளது. ஆரோக்கியம் கெட்டுள்ள முஸ்லிம் அரசியலை ஆரோக்கியமுடையதாக மாற்ற வேண்டுமாயின் நல்ல ஆத்மாக்களின் ஒற்றுமையும், ஒத்துழைப்பும், முயற்சியும் அவசியமாகும்.

Thanks: Vidivelli 19.04.2019


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here