எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0
13

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை மருத்துவமனை மற்றும் புகையிரத நிலையத்தை ஊடறுத்துச் செல்லும் பாதையினை கம்பரெலிய திட்டத்தினூடாக செப்பனிட்டு கோறளைப்பற்று மத்தி என பெயர் பலகை இட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.

மருத்துவமனை மற்றும் புகையிரத நிலையத்தை ஊடறுத்துச் செல்லும் பாதையை கம்பரெலிய திட்டத்தினூடாக செப்பனிட்டு கோறளைப்பற்று மத்தி என பெயர் பலகையிட்டு தமிழர்களின் நிலவரம்பை ஆக்கிரமிக்க முஸ்லிம்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ், அதன் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரன் மற்றும் வாழைச்சேனை பிரதேச இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் கோறளைப்பற்றில் நிலப்பரப்பை காக்க வேண்டுமாயின் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எமது நிலப்பரப்பை கவனமெடுங்கள், பதவியை தக்க வைக்க பாகுபாடு காட்டுகிறாயா? எமது நிலம் எமக்கு வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே நடவடிக்கை எடுங்கள், எமது எல்லைக்குள் அத்துமீறாதே, பூர்வீக நிலத்தை அபகரிக்காதே போன்ற வாசகங்களை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

அத்தோடு தமிழர்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்ய ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் துடிக்கின்றனர், கோறளைப்பற்று மத்தி எனும் ஆதாரத்துக்காக முழுமையான தமிழர்கள் எல்லைக்குள் இருக்கும் எல்லை வீதிகளை வீதிப் புனரமைப்பு எனும் பெயரில் கோறளைப்பற்றுக்குள் இருக்கும் வீதிகளை கோறளைப்பற்று மத்தி முஸ்லிம் வீதிகளாக உருவாக்குகின்றனர், தமிழ் உறவுகளே ஒன்றுபட்டால் தான் எமது நிலப்பரப்பை பாதுகாக்க முடியும் ஒன்று படுங்கள் என்று கோசங்களை ஆர்பாட்டகாரர்கள் எழுப்பினர்.

குறித்த பிரச்சனை தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் நேரடி தலையீட்டால் மருத்துவமனை மற்றும் புகையிரத நிலையத்தை ஊடறுத்துச் செல்லும் பாதையினை கம்பரெலிய திட்டத்தினூடாக செப்பனிடும் வேலை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here